உங்க கட்சி பிரச்னையை பாருங்க; ராகுலுக்கு மாயாவதி அட்வைஸ்
உங்க கட்சி பிரச்னையை பாருங்க; ராகுலுக்கு மாயாவதி அட்வைஸ்
ADDED : பிப் 21, 2025 02:32 PM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்ற கட்சி தலைவர்களை குற்றம் சாட்டுவதற்கு முன், தனது சொந்த கட்சியின் வேலையை பார்க்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவுரை வழங்கி உள்ளார்.
அவரது அறிக்கை: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் 'பி டீம்' ஆக காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. இல்லையெனில், இந்தத் தேர்தலில் காங்கிரஸின் நிலைமை இவ்வளவு மோசம் அடைந்து இருக்காது. அந்த கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்களின் டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை.
எனவே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எந்தவொரு விஷயத்திலும் மற்றவர்களை, குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை, குற்றம் சாட்டுவதற்கு முன்பு தனது சொந்த கட்சியின் வேலையை பார்க்க வேண்டும். இது நான் அவருக்கு அளிக்கும் அறிவுரை.
டில்லியில் அமைக்கப்பட்ட புதிய பா.ஜ., அரசு, தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில், இந்தக் கட்சியின் நிலையும் காங்கிரஸைப் போலவே மோசமாகிவிடும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.