மயிலாடுதுறையில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மயிலாடுதுறையில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 12, 2024 09:33 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2வது நாளாக தொடரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 2வது நாளாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கடலோர கிராமங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திற்கு உள்ள 28 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ள பிற தொழிலாளர்களும் வருவாய் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளதால் அதனை விரைந்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக சுற்றுலா தளங்களான தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று காலை தொடங்கி இன்று காலை 6:30 மணி வரை மயிலாடுதுறை 88.20 மி.மீ, மணல்மேடு 71 மி.மீ, சீர்காழி 66 மி.மீ, கொள்ளிடம் 43.60 மி.மீ, தரங்கம்பாடி 62.60 மி.மீ, செம்பனார் கோவில் 74.60 மி.மீ என மாவட்டம் முழுவதும் பரவலாக 405.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

