ADDED : டிச 10, 2024 07:22 AM

பெங்களூரூ மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 560 கி.மீ., துாரத்திலும், யாத்கிர் பஸ் நிலையத்தில் இருந்து, 17 கி.மீ., தொலைவிலும் கோவில் உள்ளது.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, '12627' என்ற எண் உள்ள கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம். இந்த ரயில், பெங்களூரிலிருந்து தினமும் இரவு 7:20 மணிக்கு புறப்பட்டு, யாத்கிர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 3:50 மணிக்கு சென்று அடையும்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, '11014' என்ற எண் உள்ள மும்பை எல்.டி.டி., எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம். மாலை 5:59 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2:00 மணியளவில் யாத்கிரை அடையலாம். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை சென்று அடையலாம்.
- நமது நிருபர் -
யாத்கிர் மாவட்டம், கர்நாடகாவின் வெயில் மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு பல சிறப்பு அம்சங்களும் உள்ளன. குறிப்பாக யாத்கிரில் குடிகொண்டுள்ள மயிலார லிங்கேஸ்வரா கோவில், பக்தர்களை தன் வசம் கவர்ந்திழுக்கிறது.
யாத்கிரில் அமைந்துள்ள மயிலார லிங்கேஸ்வரா கோவில், 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. பொதுவாக கோவில்களில், ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் மயிலார லிங்கேஸ்வரா கோவிலில் தீபாவளி, மகர சங்கராந்தி நாட்களில், சிறப்பான திருவிழா நடக்கிறது. இந்த நாளில் பல்லக்கு உற்சவம் உட்பட, பல்வேறு வழிபாடுகள் நடக்கின்றன.
கிருத யுகம்
மயிலார லிங்கேஸ்வரா கோவிலை மயிலார கோட்டை, ஏழு கோட்டை மல்லய்யா கோவில் என்றும் அழைக்கின்றனர். கிருத யுகத்தில் சப்த ரிஷிகள், தங்களின் மனைவி, குழந்தைகளுடன், மனிசூரா பர்வதத்தில் வசித்தனர். தங்களின் கடுமையான தவத்தால் அதிக வலிமை பெற்றிருந்தனர்.
மனிசூரா பர்வதத்தின் அருகிலேயே, மனிபுரா என்ற நகரம் இருந்தது. இதை ஆண்ட மல்லாசுர தைத்யா என்ற அசுரன், பிரம்ம தேவரை நினைத்து கடின தவம் செய்து, சாகா வரம் பெற்று பராக்கிரமசாலியாக விளங்கினார். வரம் கிடைத்த அகங்காரத்தில் தன் சகோதரன் மனிகாசுரனுடன் சேர்ந்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொல்லை கொடுக்க துவங்கினார்.
சம்ஹாரம்
தங்களை காக்கும்படி தேவர்கள், சிவனிடம் சரண் அடைந்தனர். அதன்பின் சிவபெருமான் படைகளுடன் சென்று, மல்லாசுரன், மனிகாசுரனுடன் போரிட்டு இருவரையும் வதம் செய்ததாக, புராணங்கள் கூறுகின்றன.
தேவர்கள், மனிதர்கள் என, யாராலும் தனக்கு இறப்பு நேரிட கூடாது என, மல்லாசுரன் பிரம்மனிடம் வரம் பெற்றிருந்ததால், சிவன் லிங்க அவதாரத்தில் அசுரனை சம்ஹாரம் செய்ததாகவும் கூறுவதுண்டு.
யாத்கிர் மட்டுமின்றி, பல்லாரி, ஹாவேரி உட்பட, கர்நாடகாவின் பல இடங்களில் மயிலார லிங்கேஸ்வரா திருத்தலங்கள் உள்ளன. இந்த தலங்களில் பல அற்புதங்கள் நடந்துள்ளன. இந்த கோவிலில் வழிபடுவதன் மூலம் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நோய் வராமல் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

