குப்பையுடன் கட்டடக் கழிவுகள் மேயர் ஓபராய் குற்றச்சாட்டு
குப்பையுடன் கட்டடக் கழிவுகள் மேயர் ஓபராய் குற்றச்சாட்டு
ADDED : பிப் 14, 2024 09:47 PM
புதுடில்லி:''குப்பை சேகரிக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சில நிறுவனங்கள், கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்புக் கழிவுகளை குப்பையுடன் கலந்து குப்பைக் கிடங்கில் கொட்டுகின்றன,'' என, டில்லி மேயர் ஷெல்லி ஓபராய் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லி மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ஷெல்லி ஓபராய் நிருபர்களிடம் கூறியதாவது:
எடையை அதிகரித்துக் காட்டுவதற்கான, குப்பை அள்ளும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நில நிறுவனங்கள், கட்டுமானக் கழிவுகள் மற்றும் கட்டட இடிபாடுகளை குப்பையுடன் சேர்த்து குப்பைக் கிடங்கில் கொட்டுகின்றன. சில நாட்களுக்கு முன், இந்த விவகாரம் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கவும், இதுபோன்ற செயல்களை செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது.
குப்பைகளைக் அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். கட்டடக் கழிவுகள் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

