ADDED : மே 15, 2026 01:12 AM
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரைக்கு ஏற்ப, டில்லி மேயர் பிரவேஷ் வாஹி நேற்று மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரிக் ஷாவில் பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்தார்.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடக்கும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டு உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில சிக்கன நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து, டில்லி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோ ரயில், பஸ் மற்றும் மின்சார ரிக்ஷாக்களில் பயணம் செய்து வருகின்றனர். டில்லி மேயர் பிரவேஷ் வாஹி நேற்று, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரிக்ஷாவில் பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது மேயர் பிர வேஷ் வாஹி கூறியதாவது :
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரைகளை செயல்படுத்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடிவு செய்தேன். டில்லி மக்களும் இந்த முடிவை எடுத்தால் தலைநகர் டில்லியில் எரிபொருள் விரயம், காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.
வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலைக்குழுத் தலைவர் சத்ய ஷர்மாவும் மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரிக்ஷாவில் பயணம் செய்தார். மேலும், மாநகராட்சி கமிஷனருக்கு ஷர்மா அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும், ஆலோசனை கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்தவும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
