நானும், ரேகா குப்தாவும்... டில்லி முதல்வருடனான நினைவுகளை பகிர்ந்த காங்., தலைவர்
நானும், ரேகா குப்தாவும்... டில்லி முதல்வருடனான நினைவுகளை பகிர்ந்த காங்., தலைவர்
ADDED : பிப் 20, 2025 12:01 PM

புதுடில்லி: டில்லி முதல்வராக பதவியேற்கும் ரேகா குப்தாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து, காங்கிரஸ் பெண் தலைவர் அல்கா லம்பா வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., கடந்த சில தினங்களாக முதல்வரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆகியுள்ள ரேகா குப்தாவை டில்லி முதல்வராக தேர்வு செய்து பா.ஜ., தலைமை அறிவிப்பை வெளியிட்டது. அதன்பிறகு, பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹரியானாவின் பனியா சமூகத்தைச் சேர்ந்த ரேகா குப்தா, தற்போது டில்லி பா.ஜ.,வின் பொதுச்செயலராக உள்ளார்.பா.ஜ.,வின் மகளிர் பிரிவு தேசிய துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். வழக்கறிஞரான இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி.,யில் தன் அரசியல் பயணத்தை துவக்கினார். கடந்த, 1996 - 97ல் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பெண் தவைர் அல்கா லம்பா, டில்லி முதல்வராக தேர்வாகியுள்ள ரேகா குப்தாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதில், ' 1995ம் ஆண்டு எடுக்கப்பட்ட மறக்க முடியாத புகைப்படம் இது. டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக நானும், பொதுச்செயலாளலுக்கான தேர்தலில் ஏ.பி.வி.பி., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகா குப்தாவும் பதவியேற்றுக் கொண்ட தருணம். ரேகா குப்தாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.