மருத்துவ மாணவி மரணம்; கோல்கட்டாவில் மீண்டும் அதிர்ச்சி
மருத்துவ மாணவி மரணம்; கோல்கட்டாவில் மீண்டும் அதிர்ச்சி
ADDED : பிப் 04, 2025 12:47 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரிந்த, 31 வயது பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆக., 9ல் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ் நண்பர்கள் குழுவின் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு, கோல்கட்டா நீதிமன்றம் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், தன் வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கமர்ஹாதி இ.எஸ்.ஐ., மருத்துவமனை குடியிருப்பில், தன் தாயாருடன் ஐவி பிரசாத் என்ற அந்த மாணவி வசித்து வந்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நீண்ட நேரமாக மொபைல் போனில் அழைத்தும் எந்த பதிலும் இல்லாத நிலையில், வீட்டுக்கு வந்து பார்த்த தாயார், மகள் இறந்து கிடந்தது குறித்து போலீசில் புகாரளித்தார்.
முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் கொலை வழக்கு முடித்து வைக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், அங்கு பயிலும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.