மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி; மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி; மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
ADDED : அக் 11, 2025 03:23 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூனியர் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆர்ஜி கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கோல்கட்டாவில் இருந்து 170 கிமீ தொலைவில் மிகப்பெரிய பூங்காவான துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் தனது ஆண் நண்பருடன் அந்த மாணவி மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவியை கடத்திச் சென்று, மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், 'மகளின் தோழி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்றேன். என் மகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆண் நண்பருடன் வெளியே சென்று விட்டு, மருத்துவமனை வாயில் அருகே வந்த போது, நான்கு முதல் 5 நபர்கள் அங்கிருந்தனர். அவர்களில் ஒருவன், என் ம களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான், இவ்வாறு அவர் கூறினார்.