ADDED : மார் 08, 2024 01:59 AM

உடுப்பி மாவட்டம், குந்தாபுராவின் ஹொசங்கடி அருகில் மெட்கல் குட்டே என்ற மலை அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் பிரமாண்டமான மஹா கணபதி கோவில் உள்ளது.
கடலோர மக்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். ஏனென்றால், பழங்காலத்தில் இருந்து இன்று வரை, கோவிலின் பாரம்பரியத்தை அப்படியே காப்பாற்றி வருவதால், சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து, 2,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. புராதன காலத்தில், மஹா கணபதி, தானாகவே உருவானதாக நம்பப்படுகிறது. உச்சிக்கு செல்ல தனியாக படிக்கட்டுகள் இல்லை. இயற்கையில் அமைந்த கற்களே படிக்கட்டுகளாக உள்ளன.
மஹா கணபதி கோவில் அருகிலேயே, நாக சன்னிதியும் அருள்பாலிக்கிறது. பக்தர்கள் வேண்டிக் கொள்பவை கண்டிப்பாக நிறைவேறுவதாக நம்புகின்றனர். நிறைவேறிய பின், கோவிலுக்கு மீண்டும் வந்து, நன்றி சொல்கின்றனர். இதற்காகவே, பல கஷ்டங்களை கூறி கொண்டு பக்தர்கள் வருவதுண்டு.
இத்தகைய கோவிலின் சிறப்புகளை காண்போம். கோவில் அருகில், சிறிய குளம் உள்ளது. ஆண்டின் 365 நாட்களும் தண்ணீர் இருக்கும். இதுவரை வற்றியதே கிடையாது என்று சொல்லப்படுகிறது. கோவில் மணியை, யாரும் அடிக்காமல், தானாகவே காற்றில் அடித்துக் கொள்வது சிறப்பு.
உச்சியின் மேலிருந்து பார்த்தால், ஒரு புறம் ஹாலாடி நகரமும்; மற்றொரு புறம் ஹொசங்கடி நகரமும் தென்படும். மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை மிகு காட்சியையும் காணலாம்.
ஹொன்னய்யா கம்பளி என்ற சிற்றரசர் ஆண்ட காலத்தில், கோவிலை கட்டியதாகவும்; கெலதி சிவப்பா நாயக் மன்னர், தங்க படிக்கட்டுகள் அமைத்தாகவும் கூறப்படுகிறது. அந்த காலத்தில், இந்த மலை உச்சியில் இருந்து, அரபி கடலை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
தரையில் இருந்து, மலை உச்சிக்கு 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். நம்மை சுற்றி வெறும் பசுமையாகவே காட்சியளிக்கும் என்பதால், சோர்வு தெரியாது. ஆன்மிக சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.
செவ்வாய் மற்றும் சங்கட சதுர்த்தி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். விடுமுறை, வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
உடுப்பியில் இருந்து 63 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள மஹா கணபதி கோவிலுக்கு, குந்தாபுரம் - ஷிவமொகா இடையே பஸ்சில் செல்ல முடியும். சொந்த வாகனத்தில் செல்வது நல்லது. உணவு கொண்டு செல்வது நல்லது. அங்கு கடைகள் எதுவும் கிடையாது.
- நமது நிருபர் -

