அமித்ஷா, நட்டாவுடன் சந்திப்பு பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கிடைக்குமா?
அமித்ஷா, நட்டாவுடன் சந்திப்பு பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கிடைக்குமா?
ADDED : பிப் 07, 2024 11:04 PM

லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு தரும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோரை நேற்று சந்தித்து, மைசூரு பாஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா வலியுறுத்தினார்.
மைசூரு எம்.பி.,யாக பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹா பதவி வகிக்கிறார். 2014, 2019 ஆகிய இரண்டு முறையும் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக, 2024லும் களமிறங்க தயாராகி வருகிறார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, பார்லிமென்ட் கட்டடத்தில் நுழைந்து, அத்துமீறி செயல்பட்ட நால்வருக்கு அவர் தான் பாஸ் வழங்கியது தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்கு பின், அவர் மீது காங்கிரஸ் தரப்பில் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இதனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது.
தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை சரிபடுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சீட் பெறுவதற்காக, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதற்கிடையில், பார்லிமென்ட் கட்டடத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மைசூரு எம்.பி.,யாக கடந்த 1-0 ஆண்டுகளாக தான் செய்த வளர்ச்சிப் பணிகள் குறித்த பட்டியலை வழங்கினார்.
குறிப்பாக, மைசூரு - பெங்களூரு அதிவிரைவு சாலை; மைசூரு - குடகு தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டினார்.
தொகுதி மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளதாக கூறி, மீண்டும் தனக்கே வாய்ப்பு தரும்படி மறைமுகமாக வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது
- நமது நிருபர் -.

