ADDED : பிப் 22, 2024 06:59 AM

பெங்களூரு: “கர்நாடகா அரசு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வரும் 26, 27ம் தேதிகளில், இளைஞர் மேம்பாட்டு மாநாடு என்ற மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது,” என, அமைச்சர்கள் சரண்பிரகாஷ் பாட்டீல், பிரியங்க் கார்கே தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் கூறியதாவது:
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த, வேலை வாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். கர்நாடகா அரசு சார்பில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வரும் 26, 27ம் தேதிகளில், மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதற்கு, இளைஞர் மேம்பாட்டு மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க, மாநிலம் முழுதும் 31,000 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இன்னும் அதிகளவில் முன்பதிவு செய்வர் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக, தேசியம், சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே, தகுதியானவர்கள் இதில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில், 600 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த ஸ்டாலுக்கு செல்ல வேண்டும் என்ற குறுந்தகவல் அனுப்பப்படும். இதில் வேலை கிடைக்காதவர்களுக்கு, திறனை அதிகரித்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு பயிற்சி அளிக்க பல நிபுணர்கள் முன் வந்துள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்க உள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து வருவோருக்கு உணவு ஏற்பாடு, மெஜஸ்டிக், சாந்தி நகர் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் இருந்து இலவச பஸ் பயண வசதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
22_DMR_0007
வேலை வாய்ப்பு முகாம் குறித்து அமைச்சர்கள் சரண்பிரகாஷ் பாட்டீல், பிரியங்க் கார்கே விளக்கினர். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.
****