தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் மணிப்பூரில் கைது
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் மணிப்பூரில் கைது
ADDED : செப் 21, 2024 01:17 AM
இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி -- மெய்டி பிரிவினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் இனக் கலவரம் வெடித்தது.
அதன்பின் இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், மீண்டும் ராக்கெட் குண்டு தாக்குதல், ட்ரோன் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இதையடுத்து, தலைநகர் இம்பால் உட்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியின் போது, கே.ஒய்.கே.எல்., என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து கைதுப்பாக்கி, தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுதங்கள் வாங்குவதற்காக பொது மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், கிழக்கு இம்பாலின் போங்ஜாங் பகுதியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், 28.5 கிலோ எடை உள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு சிக்கியது.
இது, கடந்த மூன்று மாதங்களில் சிக்கிய இரண்டாவது மிகப்பெரிய வெடிகுண்டு என்று பாதுகாப்பு படையினர் கூறினர்.
இதே போல், 33 கிலோ எடை உள்ள வெடிகுண்டு கடந்த ஜூலை 20ல் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.