8வது சம்பள கமிஷனுக்கு உறுப்பினர்கள்... நியமனம்!; 18 மாதங்களில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்
8வது சம்பள கமிஷனுக்கு உறுப்பினர்கள்... நியமனம்!; 18 மாதங்களில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தல்
UPDATED : அக் 29, 2025 02:06 AM
ADDED : அக் 29, 2025 02:05 AM

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், எட்டாவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 18 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை பொறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற சலுகைகளை மறு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க, சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் கடைசியாக, 2014 பிப்ரவரியில் ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள், 2016 ஜன., 1 முதல் அமல்படுத்தப்பட்டன.
பரிந்துரை பொதுவாக ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. அதன்படி, ஏழாவது சம்பள கமிஷனின் பதவி முடிவுக்கு வருவதால், எட்டாவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள் நியமனத்திற்கும், அதன் பரிந்துரை விதிமுறைகளுக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
மத்திய அரசு அமைத்துள்ள எட்டாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவர்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற சலுகைகளை தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப ஆய்வு செய்து, எட்டாவது சம்பள கமிஷன் தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
சம்பள கமிஷன் அமைக்கப்பட்ட நாளில் இருந்து, 18 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். தேவைப்பட்டால், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வது குறித்தும் பரிந்துரைக்கப்படும். எட்டாவது சம்பள கமிஷன், 2026 ஜன., 1 முதல் செயல்படத் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு அமைத்துள்ள எட்டாவது சம்பள கமிஷன், தற்காலிக அமைப்பாக செயல்படும். இந்த கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறுசீரமைப்பு கடந்த காலங்களில் மத்திய அரசு அமைத்த பல்வேறு குழுக்களுக்கு இவர் தலைவராக செயல்பட்டுள்ளார்.
குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச தொகுதி மறுசீரமைப்பு கமிஷனின் தலைவராகவும், உத்தரகண்ட் பொது சிவில் சட்ட வரைவு கமிட்டியின் நிபுணராகவும் பணியாற்றியவர்.
பெங்களூரு, ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மானிய விலையில் உரங்கள்
மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ராபி பருவ கால சாகுபடி உரங்களுக்கான புதிய மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நடப்பாண்டு ராபி பருவத்திற்காக, 'பாஸ்பட்டிக்' மற்றும் 'பொட்டாஷியம்' உரங்களுக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானிய விலையை மத்திய உரங்கள் துறை நிர்ணயித்தது. இது தொடர்பான கருத்துரு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் வேளாண் தொழிலுக்கு தேவையான முக்கிய உரங்கள் மற்றும் இடுபொருட்கள், விவசாயிகளுக்கு மலிவான விலையில் கிடைக்கும். ராபி பருவத்திற்கான தற்காலிக நிதி தேவை, 37,952.29 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த காரிப் பருவ சாகுபடிக்கான நிதி தேவையை விட, 736 கோடி ரூபாய் அதிகம்.
- நமது சிறப்பு நிருபர் -:

