UPDATED : நவ 08, 2024 10:27 AM
ADDED : நவ 07, 2024 11:05 PM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்து, தொடர்ந்து தினமும் அமளியை சந்தித்து வருகிறது. நேற்று (அக்-7) , ஆளும் தேசிய மாநாட்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இது போல் இன்றும் (அக்-8) பா.ஜ., எம்எல்ஏ.,க்களும், மகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ.,க்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு பின், சட்டசபை கூட்டத்தொடர் சமீபத்தில் துவங்கியது. முதல் நாளில் இருந்தே, சட்டசபையில் கட்சிகள் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
சிறப்பு அந்தஸ்து
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கக் கோரும் தீர்மானம், நேற்று முன்தினம் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை நேற்று துவங்கியதும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா பேசினார். அதற்கு, ஆளும் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆவாமி இதேஹத் கட்சியின் எம்.பி.,யான இன்ஜினியர் ரஷீத்தின் சகோதரரான எம்.எல்.ஏ., ஷேக் குர்ஷீத், கையில் ஒரு பேனருடன் சபையின் நடுப்பகுதிக்கு வந்தார்.
'சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும்; அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, அதில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஷேக் குர்ஷீத்திடம் இருந்து பேனரை பறிக்க பா.ஜ., உறுப்பினர்கள் முயன்றனர். அதை தடுக்க காவலர்கள் முயன்றனர். இதனால், கடும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சபையின் மையப் பகுதிக்குள் நுழைந்து, அந்த பேனரை பறித்து, கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து, 15 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்துல் ரஹீம் ரத்தேர். ஆனாலும், பா.ஜ., உறுப்பினர்கள் சபையின் நடுப்பகுதியில் நின்று கோஷமிட்டனர். சபை மீண்டும் கூடியதும், இந்த கோஷம் தீவிரமானது.
தள்ளுமுள்ளு
இதையடுத்து, சபையின் நடுப்பகுதியில் நின்று கோஷமிடும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி, சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது, சபை காவலர்களுக்கும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மூன்று எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அந்த நேரத்தில், பா.ஜ., மற்றும் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரஸ்பரம் கோஷம் எழுப்பினர். அனைவரும் எழுந்து நின்றும், மையப் பகுதிக்குள் நுழைந்தும் கோஷமிட்டனர்.
இதனால், பெரும் அமளி எழுந்தது. இரு தரப்பும் எழுப்பிய கோஷங்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், சபையை நாள் முழுதும் ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.