நினைவு கலாசார மையம் இன்று திறப்பு; முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு
நினைவு கலாசார மையம் இன்று திறப்பு; முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு
ADDED : மே 18, 2025 04:29 AM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காட்டில், வி.டி., பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையத்தை, முதல்வர் பினராயி விஜயன் இன்று திறந்து வைக்கிறார்.
கேரள மாநிலம், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, ஐந்து ஏக்கரில் 68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, வி.டி., பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் இன்று திறக்கப்படுகிறது. மாலை, 4:00 மணிக்கு கலாசார மையத்தில் நடக்கும் திறப்பு விழாவை, முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார். கலாசாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சஜி செரியான் தலைமை வகிக்கிறார்.
பினராயி விஜயன் முதல் முறையாக முதல்வரான போது, அனைத்து மாவட்டங்களிலும் மன்மறைந்த கலாசார நாயகர்கள் பேரில் மையங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தார்.
தற்போது, பாலக்காடு, காசர்கோடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில், கலாசார மையங்கள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், பாலக்காட்டில் 2019ல் அடிக்கல் நாட்டிய வி.டி., பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.
பாலக்காடு மாவட்டத்தில், மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் இந்த கலாசார மையம் நிறுவப்பட்டுள்ளது. 'கண்ணியார் களி, தோல்ப்பாவை கூத்து, பொராட்டு நாடகம்' என, மாவட்டத்தின் தனித்துவமான கலைகளை உயிர்ப்பிக்க, நாட்டுப்புறவியல் மையமும், இந்த கலாசாரம் மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது போன்ற கலைகளை குறித்து படிக்கவும் இங்கு வாய்ப்புள்ளது.
பாலக்காட்டின் பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்கும் நோக்கத்துடன், இங்கு டிஜிட்டல் நூலகமும் உள்ளது. ஓவியர்கள், சிற்பிகள் போன்றவர்களுக்கு பயிற்சிக்கான வசதிகளும் உள்ளன. படைப்புகளை காட்சிப்படுத்த கண்காட்சியகம் மற்றும் படப்பிடிப்புகள் தொடர்பான பணிகள் செய்வதற்கான வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.