ADDED : பிப் 10, 2025 05:40 AM

மைசூரை சேர்ந்த இளம் தம்பதி மாதுரி - ரோமியோ டைசன். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ரோமியோ, ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு 2020, ஜூனில் சாரா ரோமியோ, 4, எனும் அழகான குட்டி தேவதை பிறந்தது.
இந்த குழந்தையை பெரும் சாதனையாளராக வளர்க்க வேண்டும் என பெற்றோர் யோசித்து வந்து உள்ளனர். இதற்காக பல பயிற்சிகளை சிறுவயதிலே கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். சிறுமியும் பயிற்சிகளை ஆர்வமாக கற்று கொண்டு வந்து உள்ளார்.
அத்தை உதவி
தற்போது, புனித பிரிட்ஜிட்ஸ் பள்ளியில் ப்ரீ கே.ஜி., படித்து வருகிறார். சிறுமியின் அத்தை மரியா ஷைனி, மாலையில் வீட்டில் எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரிடம், சிறுமி சாரா படிக்க துவங்கி உள்ளார்.
அத்தையும் பாசமாக கற்று கொடுத்து உள்ளார். இந்த சமயத்தில் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களைத் தவிர, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் அவற்றின் தலைநகரங்களின் பெயரை படிக்க துவங்கி உள்ளார். இதை மனப்பாடம் செய்ய ஆரம்பித்து உள்ளார்.
குறைந்த நேரம்
இதனிடையில் இவரது பெற்றோர் சமூக வலைதளத்தில், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்' மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை கூறும் போட்டி நடக்கிறது என்பதை பார்த்து உள்ளனர். இதில், தங்கள் செல்ல பிள்ளை சாராவையும் பங்கேற்க வைக்க வேண்டும் என ஆசைபட்டு உள்ளனர்.
இதன்படி, கடந்த மாதம் 7 ம் தேதி, இப்போட்டியில் சாரா பங்கேற்றார். இதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை ஒப்பித்து உள்ளார். இப்போட்டியில் பல சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். இதில், குறைந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களின் பெயரையும் விரைவில் கூறி சாரா வெற்றி பெற்றதாக, இம்மாதம் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனால் சாராவும், அவரது பெற்றோர் ஆனந்தம் அடைந்தனர். தற்போது சாராவை பள்ளி நிர்வாகம், அக்கம் பக்கத்தினர், நெட்டிசன்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சாராவிற்கு கவிதை ஒப்பித்தல், மாறு வேட போட்டிகளில் பங்கு பெறுவது என்றால் அலாதி ஆர்வமாம்- நமது நிருபர் -
.

