பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை; கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை; கர்நாடக அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
ADDED : டிச 10, 2025 01:00 AM

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'கர்நாடகாவில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில், மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' என, மாநில தொழிலாளர் நலத்துறை, கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் 'மேனேஜ்மென்ட் ஆப் அவிராடா ஏ.எப்.எல்., கனெக்டிவிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட்' உள்ளிட்ட அமைப்புகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனு நீதிபதி ஜோதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பு வக்கீல் பிரசாந்த் வாதிட்டதாவது: 18 முதல் 52 வயதுக்கு உட்பட்ட பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதை தொழிலாளர் துறை கட்டாயமாக்கி உள்ளது.
தொழிற்சாலைகள் சட்டத்தின்படி, 20 நாட்கள் பணியாற்றினால் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இதுவே, ஆண்டுக்கு 18 நாட்களாகும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 உடல்நல பாதிப்பு விடுமுறை மற்றும் 18 நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இது தவிர, 12 சாதாரண விடுமுறையும் உள்ளன.
எந்த மாநிலமோ அல்லது மத்திய அரசோ, மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற சட்டத்தை செயல் படுத்தவில்லை. அரசு எந்த அதிகாரத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டது என்பதையும் அறிவிப்பில் குறிப்பிடவில்லை.
நீதிபதி ஜோதி: அறிவிப்பை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தியதா? அவர்களிடம் இருந்து ஆட்சேபனைகள் பெற்றதா?
வக்கீல் பிரசாந்த்: இல்லை.
இதையடுத்து நீதிபதி ஜோதி, மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண்: மாதவிடாய் நாளில் விடுமுறை வழங்குவதற்கு முன், அரசு அனைத்து சட்டங்களையும் பின்பற்றி உள்ளது. இந்த உத்தரவில் எந்த சட்ட குறைபாடும் இல்லை. மேலும், அரசின் வாதங்களை கேட்காமல், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது. நாளை (இன்று) இவ்வழக்கில் நேரில் ஆஜராகி, இடைக்கால நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்கிறேன்.
நீதிபதி: அரசு தரப்பு வாதங்களை கேட்க வேண்டி உள்ளதால், இன்று (10ம் தேதி) விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

