காதலியின் தந்தைக்கு 'டார்கெட்'; ஆளை மாற்றி கொன்ற கூலிப்படை
காதலியின் தந்தைக்கு 'டார்கெட்'; ஆளை மாற்றி கொன்ற கூலிப்படை
ADDED : ஜன 14, 2025 12:47 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காதலியின் தந்தையை கொல்ல அனுப்பப்பட்ட கூலிப்படையினர், தவறுதலாக டாக்சி டிரைவரை கொன்ற சம்பவத்தில் காதலன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் லக்னோ அருகில் உள்ள மக்கான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர் அப்தாப் அஹமத் என்பவரிடம் ஜூனியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
கொலை திட்டம்
இந்த சூழலில், இளம்பெண்ணை வேறொரு நபருக்கு அவரது தந்தை இர்பான் அலி, கடந்த மாதம் திருமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, அந்த பெண் கணவருடன் டில்லி சென்றார். காதலியை மறக்க முடியாமல் தவித்த அப்தாப், அவரை காண பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்.
தந்தையை கொன்றால், காதலி நிச்சயம் சொந்த ஊர் வருவார். அப்போது, அவரது கணவரையும் தீர்த்து கட்டலாம் என, அப்தாப் திட்டமிட்டார்.
முதலில் காதலியின் தந்தையை கொல்ல முடிவு செய்த அவர், இதற்காக கூலிப்படையினர் முகமது யாசிர் மற்றும் கிருஷ்ணகாந்த் ஆகியோரை ஏற்பாடு செய்தார்.
அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கிய அப்தாப், கொலையை நிறைவேற்றினால் 2 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசினார். இளம்பெண்ணின் தந்தையையும் அவர்களுக்கு அடையாளம் காட்டியிருந்தார்.
இந்த சூழலில், கடந்த 30ம் தேதி இரவு, பிகாம்பூர் பகுதியைச் சேர்ந்த டாக்சி டிரைவர் முகமது ரிஸ்வான், மதேகாஞ்ச் பகுதியில் வாகனத்தில் சென்ற போது, அவரை வழிமறித்த யாசிர் மற்றும் கிருஷ்ணகாந்த், அவர்தான் இளம்பெண்ணின் தந்தை என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
3 பேர் கைது
இதில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ரிஸ்வான் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாமல் தவறு தலாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் அப்தாப் அஹமத், முகமது யாசிர் மற்றும் கிருஷ்ண காந்த் ஆகியோரை லக்னோ போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், மொபைல் போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொலை நடந்த 13 நாட்களுக்குள் குற்றவாளியை கைது செய்த போலீசாரை, உயரதிகாரிகள் பாராட்டினர்.