ADDED : டிச 05, 2024 07:28 AM
பெலகாவியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாமேளா நடத்த எம்.இ.எஸ்., அமைப்பு அனுமதி கேட்டுள்ளது.
கர்நாடகா- - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு மராத்தி பேசுவோர் கணிசமாக வசிப்பதால், பெலகாவியை மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் விட்டுக் கொடுக்க கர்நாடகா மறுக்கிறது.
பெலகாவி, கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மஹாராஷ்டிராவுக்கு காட்டுவதற்காக பெலகாவியில் சுவர்ண விதான் சவுதா கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இங்கு சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகரன் சமிதி, பெலகாவியில் ஆண்டுதோறும் மகா மேளா என்ற பெயரில் பிரமாண்ட பொதுகூட்டம் நடத்துகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகாமேளா கொண்டாட்டத்தின்போது, கன்னடர்கள், மராத்தியர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. அதன்பின், மகா மேளா கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெலகாவியில் மகாமேளா நடத்த, கர்நாடக அரசிடம் அனுமதி கேட்டு, கோலாப்பூர் மாவட்ட கலெக்டரிடம் எம்.இ.எஸ்., அனுப்பினர் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியினர் நேற்று மனு அளித்தனர்.
'மகாமேளா நடத்த கர்நாடகா அரசு அனுமதி கொடுக்கா விட்டால், கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் கர்நாடக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை தடுப்போம். இரு மாநிலங்களுக்கு இடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, எம்.இ.எஸ்., மிரட்டல் விடுத்துள்ளது. -- நமது நிருபர் -