சித்தராமையா இறந்ததாக மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கேட்டது 'மெட்டா' நிறுவனம்
சித்தராமையா இறந்ததாக மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கேட்டது 'மெட்டா' நிறுவனம்
ADDED : ஜூலை 19, 2025 01:58 AM

பெங்களூரு:மரணம் அடைந்ததாக தவறாக மொழிபெயர்த்ததற்கு, முதல்வர் சித்தராமையாவிடம், 'மெட்டா' நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கடந்த 14ம் தேதி பெங்களூரில் காலமானார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, கடந்த 15ம் தேதி முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பான புகைப்படம், முதல்வரின் அதிகாரப்பூர்வ 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிடப்பட்டது. சரோஜா தேவி உடலுக்கு சித்தராமையா அஞ்சலி செலுத்தினார் என்று கன்னடத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.
ஆனால், 'பேஸ்புக்' நிறுவனத்தின் தாய் நிறுவனமான, 'மெட்டா'வின் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவி, சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக மொழிபெயர்த்தது. இது பற்றி அறிந்த சித்தராமையா கடும் அதிர்ச்சி அடைந்தார்.
முதல்வரின் ஊடக ஆலோசகர் கே.வி.பிரபாகர், மெட்டா நிறுவனத்திற்கு கடிதம் எழுதி, தவறான மொழிபெயர்ப்புக்கு அதிருப்தியை தெரிவித்ததுடன், தானியங்கி மொழிபெயர்ப்பு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இது குறித்து, முதல்வர் சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
மெட்டா தானியங்கி மொழிபெயர்ப்பு, கன்னட உள்ளடகத்தின் உண்மைகளை தவறாக திரித்து, பயனர்களை தவறாக வழிநடத்துகிறது. அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தானது. சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் அலட்சியம், பொதுமக்களின் புரிதல், நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறேன். துல்லியமான மொழிபெயர்ப்பு இருக்கும் வரை, மொழிபெயர்ப்பு சேவையை மெட்டா நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நடந்த தவறுக்காக மெட்டா நிறுவனம் நேற்று மன்னிப்பு கோரியது. தவறான மொழிபெயர்ப்புக்கு காரணமான சிக்கலையும் சரி செய்து இருப்பதாகவும் கூறியது.