ADDED : மார் 19, 2025 09:16 PM
பெங்களூரு; மெட்ரோ ரயில் லோகோ பைலட் பணிக்கு, கன்னடம் தெரியாத பிற மாநிலத்தவர்களை பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு வந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், சமீபத்தில் 50 லோகோ பைலட்டுகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்திருந்தது. இதற்கு, கன்னடம் தெரியாத பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், கன்னடம் தெரியாதவர்கள் ஒரு ஆண்டிற்குள் கன்னடம் கற்று கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து துணை முதல்வர் சிவகுமார் தனது, 'எக்ஸ்' தளத்தில், 'மெட்ரோ நிர்வாகம் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேலை வாய்ப்பில், கன்னடர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது' என கூறியிருந்தார்.
மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்த நிலையில், அந்த அறிவிப்பை நிர்வாகம் வாபஸ் பெற்று உள்ளது.