புதிய அணை தேவையில்லை; புத்திமதி சொல்கிறார் மெட்ரோமேன்; பெரியாறு விவகாரத்தில் 'டுவிஸ்ட்'
புதிய அணை தேவையில்லை; புத்திமதி சொல்கிறார் மெட்ரோமேன்; பெரியாறு விவகாரத்தில் 'டுவிஸ்ட்'
ADDED : ஆக 29, 2024 06:56 AM

திருவனந்தபுரம்: 'முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை. பழைய அணையை முறையாக பராமரித்தால் அடுத்த 50 ஆண்டுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்' என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு தொடர்ந்து புகார் கூறி வருகிறது. தமிழகம் அதை மறுத்து அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறுகிறது. நிபுணர்களின் ஆய்விலும் அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த அணை உடையும் அபாயத்தில் உள்ளது என்றும், அப்படி உடைந்தால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகள் பாதிக்கப்படும் என்றும் கூறிய கேரள அரசு, புதிய அணை கட்டுவதே இதற்கு தீர்வு என தெரிவித்திருந்தது.
இதுகுறித்து, 92 வயதான பொறியாளர் ஸ்ரீதரன் (டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முன்னாள் நிர்வாக இயக்குனர், டில்லி மெட்ரோவின் கட்டுமானத்திற்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர். மெட்ரோமேன் என அழைக்கப்படுபவர்) கூறியதாவது: முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைத்தால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கிட விட முடியும். அதை செய்தாலே போதும். புதிய அணை அவசியமில்லை. நான்கு அல்லது 5 சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் நீரோட்டத்தை திசை மாற்றி விடலாம்; அதன் மூலம் அணை நீர் மட்டம் பாதுகாப்பான அளவில் பராமரிக்கவும் முடியும்.
அதிக செலவுகள்
இப்படி செய்து விட்டால், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவை இருக்காது. பழைய அணையை முறையாக பராமரித்தாலே அடுத்த 50 ஆண்டுக்கு பாதுகாப்பனதாக இருக்கும். ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்கள் அமைத்தும் சிறிய வாய்க்கால்களை கட்டமைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம். புதிய அணையை கட்டுவதற்கு அதிக செலவு ஆகும். குறைந்தபட்சம் 12 முதல் 15 ஆண்டு அணையை கட்டி முடிக்க தேவைப்படும். அதற்கு பதிலாக இந்த நடைமுறைகளை பின்பற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.