ADDED : ஜன 23, 2025 12:31 AM

'எம்.ஜி.,' நிறுவனம், ஐந்து மின்சார கார்கள், நான்கு இன்ஜின் கார்கள் என ஒன்பது கார்களை காட்சிப்படுத்தியது.
இதில், 'சைபர்ஸ்டர்' மற்றும் 'எம் 9' மின்சார கார்கள், 'மெஜஸ்டர்' எஸ்.யூ.வி., ஆகிய கார்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அதேசமயம், 60களில் வந்த மிட்கெட் காரையும் காட்சிப்படுத்தியது.
சைபர்ஸ்டர்: இது, இந்நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். வரும் மார்ச் மாதத்தில் அறிமுகமாக உள்ளது. தற்போது, முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ளன. வினியோகம், ஏப்ரல் முதல் துவங்கும். இந்த காரில், 77 கி.வாட்.ஹார்., பேட்டரி உள்ளது. வெறும் 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகத்தை எட்டும். ரேஞ்ச், 580 கி.மீ.,ராக உள்ளது.
எம் - 9: இது, இந்நிறுவனத்தின் பிரிமியம், மின்சார எம்.பி.வி., கார் ஆகும். இதில், 7 பேர் வரை பயணிக்கலாம்.
இந்த காரின் முன்பதிவு மார்ச் முதல் துவங்கும் என்றும், வினியோகம் ஏப்ரலில் துவங்கும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரில், 90 கி.வாட்.ஹார்., பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 430 கி.மீ., ஆகும்.
மெஜஸ்டர்: இந்த கார், தற்போது சந்தையில் இருக்கும் கிளாஸ்டர் எஸ்.யூ.வி., காரை விட பெரிய கார். 61 எம்.எம்., நீளம், 90 எம்.எம்., அகலம் அதிகமாக உள்ளது. கிளாஸ்டர் காரில் இருக்கும், அதே 2 லிட்டர், டர்போ டீசல் இன்ஜின் தான் இதில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.