மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு
UPDATED : ஜன 13, 2024 04:35 PM
ADDED : ஜன 13, 2024 04:00 PM

சென்னை: புயல், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.39,000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 3, 4ம் தேதிகளில், 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. டிச., 17, 18ல் பெய்த வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களுக்கும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு நிவாரணத் தொகையாக, 37,907.19 கோடி ரூபாய் கோரியுள்ளது.
இந்நிலையில், புயல், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.39,000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர். அப்போது அவர்கள்,''தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சுமார் ரூ.37,000 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிதித் துறை, வேளாண் துறை மற்றும் உள்துறை ஆகிய மூன்று துறைகளுடன் இணைந்து தமிழக வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசித்து, வரும் 27ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.