செப்டம்பரில் விடைபெறுகிறது 'மிக் 21 பைசன்' விமானம்
செப்டம்பரில் விடைபெறுகிறது 'மிக் 21 பைசன்' விமானம்
ADDED : ஜூலை 23, 2025 12:08 AM

புதுடில்லி: ரஷ்ய தயாரிப்பான, 'மிக் 21 பைசன்' போர் விமானங்களை, வரும் செப்டம்பருக்குள் சேவையில் இருந்து நீக்க, நம் விமானப்படை முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த, 'மிகோயன்- குரேவிச்' நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட, 'மிக் 21 பைசன்' போர் விமானங்கள், 1963ல், நம் விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன. நாட்டின் முதல் சூப்பர் சோனிக் விமானமான இது, வான் பாதுகாப்பு திறன்களில் சிறப்பாக செயல்பட்டது.
கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட மிக் 21 போர் விமானங்களை, நம் விமானப்படை இயக்கி உள்ளது. 1965 மற்றும் 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில், இந்த விமானம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக, 2019 பாலகோட் வான்வழித் தாக்குதலில், 'விங் கமாண்டர்' அபிநந்தன் வர்தமான், மிக் -21 பைசன் போர் விமானத்தை ஓட்டி, பாகிஸ்தானுடன் சண்டையிட்டார். மேலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையிலும் இந்த விமானம் முக்கிய பங்காற்றியது.
தற்போதைய நிலவரப்படி, மிக் 21 போர் விமானங்களில் பைசன் ரக விமானங்கள் மட்டுமே நம் விமானப் படையில் உள்ளன. இந்நிலையில், வரும் செப்டம்பருக்குள் இந்த விமானங்களை சேவையில் இருந்து நீக்க, நம் விமானப்படை முடிவு செய்துள்ளது. நாட்டுக்காக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில், சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் விடையளிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிக் 21 போர் விமானங்களுக்கு ஓய்வளிக்க சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. எனினும், 'தேஜஸ் எம்.கே.1 - ஏ' போர் விமானம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், அது தள்ளிப்போனது.