ராணுவ போர் பாராசூட் அமைப்பு: டிஆர்டிஓ சோதனை வெற்றி
ராணுவ போர் பாராசூட் அமைப்பு: டிஆர்டிஓ சோதனை வெற்றி
ADDED : ஆக 26, 2026 07:03 PM
சண்டிகர்: உலகின் மிக உயர்ந்த பாராசூட் இறங்கு தளங்களில் ஒன்றான, லடாக்கின் நியோமா பகுதியில், 22,000 அடி உயரத்தில், ராணுவ போர் பாராசூட் அமைப்பை, டிஆர்டிஓ எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
நம் முப்படைகளுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை டிஆர்டிஓ உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. அந்த வகையில், ராணுவ போர் பாராசூட் அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த போர் முறை பாராசூட்டை, டிஆர்டிஓவின், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள, வான்வழி வினியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகம் ஆகியவை இணைந்து வடிவமைத்து உள்ளன.
இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் நியோமா பகுதியில், ராணுவ போர் பாராசூட் அமைப்பின் சோதனையை டிஆர்டிஓ இன்று( ஆக.,26) வெற்றிகரமாக நடத்தியது. இந்த பாராசூட், 20,000 அடி உயரத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, சோதனை வீரர்கள் விங் கமாண்டர் ராகுல் ஜா, ஆர்.ஜே.சிங், விவேக் திவாரி ஆகியோர் பாதுகாப்பாக தரையிறங்கினர். இந்த சோதனை, மைனஸ் 15 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் நடந்தது.
ராணுவ போர் பாராசூட் அமைப்பு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரா கணினி, ஆக்சிஜன் அமைப்பு, ஜம்ப் சூட்கள் உள்ளிட்ட பிற துணை அமைப்புகளை சோதனை வீரர்கள் பயன்படுத்தினர். இந்த சோதனை, மிக உயரமான சூழல்களில் ராணுவ போர் பாராசூட் அமைப்பின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் போர்முறை பயன்பாட்டுத் திறனை நிரூபித்தது.
இந்த பாராசூட், குறைவான இறங்கு வேகம் மற்றும் சிறந்த திசைமாற்றும் திறன்களை கொண்டுள்ளதால், வீரர்கள் கடினமான சூழ்நிலைகளில் துல்லியமாக தரையிறங்க உதவுகிறது. இது, நாட்டின் தற்சார்பு கொள்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நியோமாவில், நம் விமானப்படை சமீபத்தில் விமான தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது, போர் விமான செயல்பாடுகளுக்காக உலகின் மிக உயர்ந்த விமான தளங்களில் ஒன்றாகும். துருப்புகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை பாராசூட் மூலம் இறக்குவது உட்பட பல ராணுவ பயிற்சிகளுக்கு, நியோமா பகுதி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
