மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் பாலுாட்டும் அறை
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் பாலுாட்டும் அறை
ADDED : செப் 21, 2024 11:16 PM
பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில், தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைக்கு பாலுாட்ட, தனி மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தல் எழுந்துள்ளது.
சமீபத்தில் பெங்களூரின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில், தாய் ஒருவர் தன் பச்சிளம் குழந்தைக்கு, தாய்ப்பால் புகட்ட இட வசதி இல்லாமல் அவதிப்பட்டார். இடம் தேடி அலைந்த பின், பிளாட்பாரம் அருகில் மறைவான இடத்தில், குழந்தைக்கு பாலுாட்டினார். கணவரும், மாமனாரும் அவருக்கு பாதுகாப்பாக நின்றிருந்தனர். இந்த காட்சியை பயணி ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தைக்கு பாலுாட்ட முடியாமல் பரிதவிக்கும் தாய்மார்களுக்கு வசதியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் பாலுாட்டும் மையம் அமைக்க வேண்டும் என, பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சில ரயில் நிலையங்கள், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையங்கள், பி.எம்.டி.சி., பஸ் நிலையங்களில், குழந்தைகளுக்கு பாலுாட்டும் மையம் உள்ளது. ஆனால் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலும், இத்தகைய வசதி இல்லை. இனியாவது வசதி செய்ய வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
நிர்பயா திட்டத்தின் கீழ், 2017ல், சில மெட்ரோ ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கெம்பே கவுடா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தாய்மார்கள் பாலுாட்டும் மையம் உள்ளது. மற்ற ரயில் நிலையங்களிலும் கூட, இது போன்ற மையங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.