ADDED : டிச 07, 2024 01:40 AM

கோராபுட் : ஒடிசாவில், 72 வகையான பாரம்பரிய அரிசி மற்றும் 30 வகை தினைகளை பாதுகாத்த பழங்குடியின பெண்ணான ராய்மதி கெயூரியாவுக்கு, ஒடிசா பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஒடிசாவின், கோராபுட் மாவட்டம், நுவாகுடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ராய்மதி கெயூரியா, 36. வறுமை காரணமாக கல்வி கற்க முடியவில்லை.
குடும்பத்தை காப்பாற்ற இளம் வயதிலேயே விவசாய கூலியாக பணியாற்ற துவங்கினார். அப்போது முதல் பாரம்பரிய தானியங்களை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
தன் மூதாதையர்களின் விவசாய முறைகளால் உந்தப்பட்டு, அழிந்து போகும் அபாயத்தில் இருந்த பயிர்களை மீட்டெடுக்கும் பணியை துவக்கினார்.
இதற்கு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் உதவியை நாடியதாக அவர் கூறியுள்ளார். இந்த வகையில், 72 வகை பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் 30 வகை தினை வகைகளை இதுவரை பாதுகாத்துள்ளார்.
தினை வகைகள் மீது அதிக ஈடுபாடுள்ள இவர், 'தினை ராணி' என்றும் அழைக்கப்படுகிறார்.
இதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார். கடந்த ஆண்டு டில்லியில் நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டுக்கு ராய்மதி அழைக்கப்பட்டார். அங்கு, தினை சாகுபடிக்கு தான் அளித்துள்ள பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.
இவருக்கு, ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் அளித்து கவுரவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவ டாக்டர் பட்டத்தை ராய்மதிக்கு வழங்கினார்.