தாவரவியல் பூங்காவில் 'மினி பீச்': சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பாடு
தாவரவியல் பூங்காவில் 'மினி பீச்': சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பாடு
ADDED : ஜன 20, 2025 12:23 AM

மூணாறு : மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்காக ஆற்றோரம் 'மினி பீச்' அமைக்கப்பட்டுள்ளது.
மூணாறில் கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அருகே 13 ஏக்கர் சுற்றளவில் சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில், தாவரவியல் பூங்கா உள்ளது. அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பூக்கள் உட்பட 600க்கும் அதிகமான வகை பூக்களின் ஒரு லட்சம் செடிகள் உள்ளன. மேலும் யானை, காட்டு மாடு, மான், அணில், வரையாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் சிற்பங்களும் பூங்காவுக்கு அழகு சேர்த்து வருகின்றன. பூங்கா முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அவை இரவில் ஜொலிக்கின்றன.
இந்நிலையில் பூங்காவின் அடிவாரத்தில் குட்டியாறு என்ற ஆறு ஓடுகிறது. அதன் கரையோரம் சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையில் 'மினி பீச்' அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாலை 6:00 மணி வரை பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். குட்டியாறு ஆற்றில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், அந்நாட்களில் மட்டும் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தினமும் பூங்காவை காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 என, தெரிவிக்கப்பட்டுள்ளது.