100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்: 22 பேர் பலத்த காயம்
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்: 22 பேர் பலத்த காயம்
ADDED : ஜன 17, 2025 12:45 AM

மூணாறு:கேரள மாநிலம் வாகமண் அருகே கர்நாடகாவைச் சேர்ந்த மினி பஸ் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 22 ஐயப்ப பக்தர்கள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
கர்நாடகாமாநிலம் பெங்களூருவை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வழி தவறி இடுக்கி மாவட்டம் காஞ்சியாறு, வாகமண் ரோட்டில் புத்தோடு பகுதியில் நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் டிரைவர் நவீன் 35, மற்றும் ஐயப்ப பக்தர்கள் விஸ்வநாத் 65, சென்னப்பா 48, பிரசாத் 35, கோபால் கிருஷ்ணா 56, சுனில்குமார் 42, மகேஷ் ஷெட்டி 60, தேஜாஷினி 8, ராமகவுடா 50, உட்பட 22 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மரம் தட்டி பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.