ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்
ADDED : ஜன 06, 2024 04:20 AM

ஜெய்ப்பூர்: ''பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்,” என, டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று மாநில டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் பங்கேற்ற 58வது மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தேசிய கல்வி கொள்கை; மற்றொன்று ஆங்கிலேயர் கால சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்கள் தண்டனை அளிப்பதை விட, நீதியை வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் வாயிலாக நாட்டின் குற்றவியல் நீதித்துறை நவீன மற்றும் அறிவியல் மாற்றத்துக்கு உட்படுத்தப்படுவது அவசியம்.
குறிப்பாக, நம் தரவுகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இதேபோல் போலீசாருக்கு பயிற்சி அளிக்கும்போதே தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.