சிசு இறப்பை தடுக்க தனி ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைப்பு
சிசு இறப்பை தடுக்க தனி ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைப்பு
ADDED : பிப் 14, 2024 04:58 AM

பெங்களூரு : சிசு இறப்பை குறைக்கவும், சுகாதார வசதி குறைவாக உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை நேற்று துவக்கப்பட்டது.
பெங்களூரு ஆரோக்கிய சவுதாவில் நேற்று குழந்தை இறப்பை தடுக்கவும், புதிதாக பிறக்கும் குழந்தையை காப்பாற்றவும் நான்கு புதிய ஆம்புலன்ஸ்கள், எட்டு நடமாடும் கண் மருத்துவ பிரிவு சேவையை, சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
குறை மாதத்தில் பிறந்த மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றவும், மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லவும் நடமாடும் ஆம்புலன்ஸ்கள் உதவும். இதில், வென்டிலேட்டர், கண்காணிப்பு கருவிகள், உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
உடல் நலக்குறைவு குழந்தைகளை கொண்டு செல்வதற்கும், மாவட்டம், தாலுகா மையங்களில் இருந்து தொலைதுார பகுதிகளில் வசிப்போருக்காக ஆம்புலன்ஸ் சேவை முக்கியம். சிசுக்களை பராமரிப்பதற்காக ஆம்புலன்சில் செவிலியர்கள் இருப்பர்.
பெங்களூரில் உள்ள வாணிவிலாஸ் மருத்துவமனை; மைசூரில் செலுவாம்பா மருத்துவமனை; ராய்ச்சூரில் ராய்ச்சூர் மருத்துவ அறிவியல் மையம்; ஹூப்பள்ளியில் கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு நான்கு ஆம்புலன்ஸ்கள்' ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும்.
சிறப்பு கவனிப்பு, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். உயர் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்லப்படும் போது, அவர்களின் பெற்றோர் பயமும், மன அழுத்தமும் குறையும்.
கண் மருத்துவ பிரிவு
தாவணகெரே, மாண்டியா, மைசூரு உட்பட எட்டு மாவட்டங்களுக்கு நடமாடும் கண் மருத்துவப் பிரிவு துவங்கப்பட்டு உள்ளது. இதற்கான வாகனத்தில் ஒரு கண் மருத்துவர், பாரா மருத்துவ கண் மருத்துவ உதவியாளர், பிளாக் சுகாதார கல்வி அதிகாரி, அலுவலக செவிலியர் இருப்பர்.
இந்த வாகனங்கள் கண்புரை, நீரிழிவு விழித்திரை, குளுக்கோமா, கருவிழி ஒளிபுகாநிலை போன்ற பிரச்னைகளை பரிசோதிக்கவும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கண்களை பரிசோதிக்கவும் உதவும்.
சுகாதார வசதி இல்லாத கிராமப்புறங்கள், மலை பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
ஒவ்வொரு வாகனமும் 15 நோயாளிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு அழைத்து செல்லும் திறன் கொண்டதாகும்.
இவ்வாறு அவர்பேசினார்.

