2.95 லட்சம் பி.பி.எல்., - ஏ.பி.எல்., கார்டுகள் மார்ச் 31க்குள் வழங்க அமைச்சர் உத்தரவு
2.95 லட்சம் பி.பி.எல்., - ஏ.பி.எல்., கார்டுகள் மார்ச் 31க்குள் வழங்க அமைச்சர் உத்தரவு
ADDED : பிப் 16, 2024 07:22 AM
பெங்களூரு: ''ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, மார்ச் 31க்குள் புதிய கார்டுகள் வழங்கப்படும்,'' என, உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் முனியப்பா சட்டசபையில் தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் யஷ்பால் சுவர்ணா, காங்., உறுப்பினர் நயனா மோட்டம்மா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
புதிதாக ரேஷன்கார்டு கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும். மார்ச் 31க்குள் 2.95 லட்சம் கார்டுகள் வினியோகிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போது விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. இதுவரை 57,651 கார்டுகள், அவசர சிகிச்சைக்காக 744 கார்டுகள் வழங்கப்பட்டன.
முந்தைய அரசு காலத்தில், இந்த விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேர்தல் உட்பட, பல காரணங்களால் புதிய பி.பி.எல்., மற்றும் ஏ.பி.எல்., கார்டுகள் வழங்கப்படவில்லை. இந்த கார்டுகளை வழங்கிய பின், ஏப்ரல் 1 முதல் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
அவசர சிகிச்சைக்காக, தாசில்தார் சிபாரிசுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடுப்பி மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல், 2023 மார்ச் வரை 13,104 பி.பி.எல்., கார்டுகளுக்கு விண்ணப்பம் வந்தது. இவற்றில் 10,738 கார்டுகள் வழங்கப்பட்டன. மீதி உள்ளவர்களுக்கு விரைவில் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில், அவசர சிகிச்சைக்காக 134 பி.பி.எல்., கார்டுகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.