கடலுக்கு அடியில் புல்லட் ரயில் சுரங்க பாதையில் அமைச்சர் ஆய்வு
கடலுக்கு அடியில் புல்லட் ரயில் சுரங்க பாதையில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஜன 19, 2025 12:46 AM

மும்பை மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்காக கடலுக்கடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதை பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார்.
மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த சேவையை துவங்க திட்டமிடப்ட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
குஜராத்தில் எட்டு, மஹாராஷ்டிராவில் நான்கு என மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் இடம்பெற உள்ளன.
புல்லட் ரயில் செல்வதற்காக, பந்த்ரா குர்லா காம்பளக்ஸ் மற்றும் ஷில்பாதா இடையே, 7 கி.மீ., துாரம் கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடலுக்கடியில் சுரங்கப் பாதை வடிவமைக்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு ரயில்கள் மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் செல்வதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பத்துடன் பணிகள் நடந்து வருகின்றன. காற்றோட்டம் மற்றும் விளக்கு வெளிச்சங்களுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கவனிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.