கல்வி துறையில் முஸ்லிம் அமைப்புகள் தலையிடுவதால் அமைச்சர் எரிச்சல்
கல்வி துறையில் முஸ்லிம் அமைப்புகள் தலையிடுவதால் அமைச்சர் எரிச்சல்
UPDATED : ஜூலை 11, 2025 06:11 PM
ADDED : ஜூலை 11, 2025 04:48 AM

திருவனந்தபுரம்: “கல்வி விவகாரத்தில் மத அமைப்புகள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது,” என, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு நடப்பு கல்வி ஆண்டில், 220 கற்பித்தல் நாட்களுக்கு தேவையான நேரத்தை பெறுவதற்காக, மாதத்தில் 16 நாட்களுக்கு வெள்ளிக்கிழமை தவிர, காலை மற்றும் மதியத்தில் தலா 15 நிமிடங்கள் என, பள்ளி நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டித்து, மாநில கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு, கேரள முஸ்லிம்கள் ஆதரவு பெற்ற, 'சமஸ்தா கேரள ஜெம்- - இய்யத்துல் உலமா' என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவுப்படியே பள்ளி வேலை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. இதை எதிர்ப்பவர்கள், நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். தேர்வுகள் அல்லது பள்ளி நேரங்களை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கி வைக்க முடியாது.
கடந்த காலங்களிலும், இதுபோல பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அனைத்தையும் நாம் ஏற்றுக்கொண்டால், பள்ளிகளை நடத்துவது கடினமாகி விடும். கல்வித் துறையில் மத அமைப்புகள் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. அதை எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள பள்ளிகளில், மாணவ - மாணவியரின் மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலத்தை பேணவும், 'ஜூம்பா' எனப்படும், நடனம் வாயிலாக செய்யப்படும் உடற்பயிற்சியை மாநில கல்வித் துறை சமீபத்தில் துவங்கியது. இதற்கும் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அதை கேரள கல்வித் துறை திட்டவட்டமாக நிராகரித்தது.

