கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி; எல்லையில் படைகள் வாபஸ் குறித்து அமைச்சர் ஜெயசங்கர் கருத்து
கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி; எல்லையில் படைகள் வாபஸ் குறித்து அமைச்சர் ஜெயசங்கர் கருத்து
ADDED : அக் 26, 2024 07:53 PM

புனே: இந்தியா - சீன எல்லையில் படைகள் திரும்பப் பெறுவதற்கு காரணமே ஒருங்கிணைந்து செயல்பட்டது தான் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா -சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, கிழக்கு லடாக் பகுதியில், நேருக்கு நேர் மோதும் வகையில் இருந்த இரு நாட்டு ராணுவத்தினரும் பின்வாங்கியுள்ளனர். இரு தரப்பிலும் இருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.
சீனாவுடன் நமக்கு எல்லை குறித்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இரு நாடுகளிடையே எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் இருந்து வந்தது. இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதனால், சர்வதேச அளவில் பதற்றம் நிலவி வந்தது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர கடந்த 4 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
அண்மையில் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா, சீன பிரதமர்கள், எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசினர். அதனடிப்படையில், இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கியுள்ளனர். இதனால், எல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்த நிலையில், புனேவில் உள்ள பிளேம் பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை விவகாரத்தில் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: எல்லையை பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கமாகும். இது எல்லாம் ஒரு இரவில் நடந்து விடாது. விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அவசியம். சீனா எல்லையில் படைகளை நிலைநிறுத்துவதற்கு பட்ஜெட்டில் 5 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால், கடும் குளிரிலும் நமது வலிமையை காட்ட முடிந்தது. எல்லையில் இயல்வு நிலை திரும்புவதற்கு, மத்திய அரசு, ராணுவம் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது, எனக் கூறினார்.