கோலார் தொகுதியில் சீட் கேட்கவில்லை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா அதிரடி
கோலார் தொகுதியில் சீட் கேட்கவில்லை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா அதிரடி
ADDED : மார் 09, 2024 11:09 PM

தங்கவயல்: ''கோலார் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவே இல்லை, கட்சி மேலிடம் யாருக்கு சீட் வழங்குகிறதோ, அவர்களை வெற்றிப் பெற வைப்பதே எங்கள் குறிக்கோள்,'' என, கர்நாடக உணவுத் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா கூறினார்.
கர்நாடக உணவு துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா. இவர், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கம்மசந்திரா கோடிலிங்கேஸ்வரா கோவிலில், சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது:
தேவனஹள்ளி தொகுதியில் எம்.எல்.ஏ., ஆகி, அமைச்சரான பின், கோலார் மாவட்டத்தில் உள்ள ஹிந்து கோவில்கள், முஸ்லிம் தர்கா, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டேன்.
கோலார் லோக்சபா தொகுதியில் 7 முறை எம்.பி.,யாக இருந்துள்ளேன். கடவுள் ஆசி தான் காரணம்.
கோலாரில் நல்ல மழை பெய்ய வேண்டும். வறட்சி இல்லாமல் விளைச்சல் பெருக வேண்டும் என்று சிவனிடம் வேண்டினேன்.
கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் அதற்காக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
ஏழைகள் நலனுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
ரேஷன் கார்டுகளுக்கு வழங்க அரிசி கிடைக்கவில்லை என்பதால் மக்களை ஏமாற்றவில்லை. அதற்கு மாற்றாக, பணம் வழங்கப்படுவதை மாநில மக்கள் நன்கு அறிவர்.
எஸ்.சி., முதல்வர் ஆகவேண்டும் என்ற பிரச்னை தேவையில்லாதது. காங்கிரஸ் ஜாதி, மதச்சார்பற்றது. நாடு, மாநிலம் மேம்பட வேண்டும் அதுவே எங்கள் லட்சியம். தேவையில்லாமல் குழப்பம் தேவையில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டியிட நான் 'சீட்' கேட்கவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் சீட் கேட்கவில்லை.
கட்சி மேலிடம் யாருக்கு சீட் வழங்கினாலும் வெற்றிப் பெற வைப்பதே காங்கிரசாரின் கடமை. கோலாரில் யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் ஆதரவாளர்களுக்கும், எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் ஆதரவாளர்களுக்கும் அடிதடி மோதல் நடந்தது பற்றி கேட்ட போது, 'இந்த சிறிய விஷயங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது' என்றார்.

