அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை அமைச்சர் லட்சுமி ஆலோசனை
அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை அமைச்சர் லட்சுமி ஆலோசனை
ADDED : மார் 21, 2025 04:25 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் 2011க்கு பின் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு, 'கிராஜுவிட்டி' எனும் பணிக்கொடை தொகை அளிப்பது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்,'' என பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, பல்வேறு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஓய்வு பெற்ற அனைவருக்கும் கவுரவ ஊதியம், கிராஜுவிட்டி உயர்த்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல அமைப்பினர் வலியுறுத்தி வருகிறீர்கள். காங்கிரஸ் அரசு, உங்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. 2011க்கு பின் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு, 'கிராஜுவிட்டி' அளிப்பது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
கடந்த 2023 - 24ம் நிதி ஆண்டில் இருந்து ஓய்வூதியத்துக்கு பிந்தைய கிராஜுவிட்டி அமல்படுத்த, ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. அமைப்புகள் கோரியபடி, 2011 முதல் கிராஜுவிட்டியை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.