25 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட பல்லாரி பெண் தமிழ் அதிகாரிக்கு அமைச்சர் மஹாதேவப்பா பாராட்டு
25 ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட பல்லாரி பெண் தமிழ் அதிகாரிக்கு அமைச்சர் மஹாதேவப்பா பாராட்டு
ADDED : டிச 26, 2024 06:25 AM
பெங்களூரு: பல்லாரியில் இருந்து காணாமல் போய், 25 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து கர்நாடகாவுக்கு அழைத்துவர காரணமாக இருந்த, தமிழரான சமூக நலத்துறை முதன்மை செயலர் மணிவண்ணன், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ரவிநந்தன் ஆகியோரை, அமைச்சர் மஹாதேவப்பா பாராட்டினார்.
பல்லாரி மாவட்டம், தற்போது விஜயபுரா மாவட்டம் ஹொஸ்பேட்டை சேர்ந்த சாக்கம்மா, மனநலம் பாதித்திருந்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய அவர், ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சென்றுவிட்டார். அம்மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள கர்நாடகாவை சேர்ந்த ரவிநந்தன், சாக்கம்மா குறித்த தகவல் அறிந்தார்.
இதுதொடர்பாக கர்நாடகாவில் உள்ள நண்பர்களுக்கு தகவல் அளித்தார். நண்பர்களில் ஒருவர், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதை பார்த்த சமூக நலத்துறை முதன்மை செயலர் மணிவண்ணன், ரவிநந்தனை தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்தார்.
உடனடியாக சாக்கம்மாவை அழைத்து வர, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா உத்தரவுப்படி அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அங்கு சென்ற அதிகாரிகள், அம்மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, நேற்று விமானத்தில் பெங்களூரு அழைத்து வந்தனர்.
பெங்களூரில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா வீட்டுக்கு, சாக்கம்மா அழைத்து வரப்பட்டார். அவரையும், அதிகாரிகளையும் வரவேற்ற அவர், சாக்கம்மாவுக்கு இனிப்பு வழங்கினார்.
பின் அமைச்சர் அளித்த பேட்டி:
சாக்கம்மா மீண்டும் குடும்பத்துடன் இணைவது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம் நினைவுக்கு வருகிறது.
சாக்கம்மா குறித்து தகவல் அறிந்த ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி ரவிநந்தன், மாநில சமூக நலத்துறை முதன்மை செயலர் மேஜர் மணிவண்ணன் ஆகியோரின் செயல் பாராட்டுக்குரியது.
டிச., 24ல் சண்டிகர் விமான நிலையத்தை சாக்கம்மா வந்தடைந்தார்.
அன்றிரவு 8:30 மணிக்கு பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையம் வந்தடைந்தார். அவரின் குடும்பத்தினருடன் சாக்கம்மா ஒப்படைக்கப்படுவார்.
சமூக வலைதளம், இதுபோன்ற நல்ல செயலுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

