அரசின் நடவடிக்கையால் காற்று மாசு குறைகிறது அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா பெருமிதம்
அரசின் நடவடிக்கையால் காற்று மாசு குறைகிறது அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா பெருமிதம்
ADDED : நவ 01, 2025 12:53 AM

புதுடில்லி: “அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காற்று மாசு குறைந்து வருகிறது,” என, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
டில்லியில் காற்றின் தரக்குறியீட்டை குறைத்துக் காட்டி மக்களை அரசு ஏமாற்றுகிறது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டிஇருந்தது.
முன்னேற்றம் இந்நிலையில், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காற்று மாசு கண்காணிப்பு நிலையங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய காற்று தர மேலாண்மை குழு ஆகியவை கண்காணித்து வருகின்றன. இது, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கும் தெரியும். டில்லி அரசு தலையிட்டு காற்றின் தரக்குறியீட்டை எப்படி குறைத்துக் காட்ட முடியும்?
டில்லி அரசு, டில்லி மாநகராட்சி, டில்லி மேம்பாட்டு ஆணையம், டில்லி மாநில தொழிற்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு கழகம் ஆகியவை, காற்று மாசை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றன.
அதனால், காற்று மாசு படிப்படியாக குறைந்து, காற்றின் தரக்குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்க, 378 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்த வெளியில் குப்பை எரிப்பதை தடுக்க, 443 குழுக்கள் மற்றும் வாகன மாசுபாட்டைக் கண்காணிக்க குழுக்கள் இருக்கின்றன.
டில்லி மாநகர் முழுதும் 300 கி.மீ., துாரத்துக்கு சாலைகளில் மண் மற்றும் துாசுக்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 390 புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.
உயரமான கட்டடங்களில் 91 புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகர் முழுதும் 280 தானியங்கி தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், ஆம் ஆத்மி தலைவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
2,000 லிட்டர் தண்ணீர் டில்லி அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து, காற்றின் தரக்குறியீடு அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது.
காற்றில் கலந்துள்ள துாசுக்களை நீக்க மாநகர் முழுதும் தண்ணீர் தெளிப்பான் பொருத்தப்பட்ட லாரிகளை புதுடில்லி முனிசிபல் கவுன்சில், டில்லி மாநகராட்சி மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இயக்கி வருகிறது.
இதுதவிர, மின் கம்பங்களில் தானியங்கி தண்ணீர் தெளிப்பான் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
பொதுப்பணித் துறையும், ஜான்ஸி ராணி சாலையில் தானியங்கி தண்ணீர் தெளிப்பான் கருவி பொருத்தியுள்ளது.
இரண்டாம் கட்டமாக புதுடில்லி ராமகிருஷ்ணாபுரம் முதல் செக்டாரில் சர்ச் சாலையில் தானியங்கி உயர் அழுத்த தண்ணீர் தெளிப்பான் பொருத்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மின் கம்பங்களில் 2.5 கோடி ரூபாய் செலவில் தானியங்கி தண்ணீர் தெளிப்பான் கருவி பொருத்தவும் விரைவில் டெண்டர் அறிவிக்கப்படும்.
இந்த திட்டத்தில் தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் கம்பங்களில் பொருத்தப்படும் கருவிகளைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லியில் காற்றின் தரக் குறியீடு நேற்று காலை 9:00 மணிக்கு 268 ஆகவும், மாலை 4:00 மணிக்கு 218 ஆகவும் பதிவாகி இருந்தது.
இதுவே, நேற்று முன் தினம் 373 ஆக இருந்தது. எனினும் மோசமான நிலையிலேயே காற்றின் தரம் நீடிக்கிறது என மத்திய மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

