பி.பி.எல்., ரேஷன் கார்டு குழப்பம் அமைச்சர் முனியப்பா முற்றுப்புள்ளி
பி.பி.எல்., ரேஷன் கார்டு குழப்பம் அமைச்சர் முனியப்பா முற்றுப்புள்ளி
ADDED : நவ 22, 2024 07:12 AM
பெங்களூரு: ''பி.பி.எல்., ரேஷன் கார்டு குழப்பத்துக்கு, அதிகாரிகள் காரணம் அல்ல. இதற்கு நானே பொறுப்பாளி,'' என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்யும் விஷயத்தில், அதிகாரிகளால் குழப்பம் ஏற்படவில்லை. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். இன்னும் ஏழு நாட்களுக்குள், பி.பி.எல்., ரேஷன்கார்டு ரத்தானவர்களுக்கு, மீண்டும் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதியுள்ள பயனாளிகளுக்கு, பி.பி.எல்., கார்டு கிடைக்கும். விரைவில் பிரச்னைகளை சரி செய்வோம். தகுதியற்றவர்கள் பி.பி.எல்., கார்டு வைத்திருந்தால், அதை ரத்து செய்து ஏ.பி.எல்.,லில் சேர்க்கப்படுவர்.
ஒருவேளை பி.பி.எல்.,க்கு தகுதி உள்ளவர்கள், ஏ.பி.எல்.,லில் இருந்தால், அவர்கள் மீண்டும் பி.பி.எல்.,லில் சேர்க்கப்படுவர்.
வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் வைத்துள்ள பி.பி.எல்., கார்டுகள் ரத்தாகும். மற்றவருக்கு ரத்தாகாது. இது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உத்தரவிடுவேன்.
பா.ஜ., எதிர்க்கட்சி. ரேஷன் கார்டுகள் மாற்றும் விஷயத்தில், என்னை ராஜினாமா செய்ய சொல்வது அவர்களின் கடமை. ஆனால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாருடைய உணவையும் பறிக்கவில்லை. அரசியல் செய்வதை தவிர, பா.ஜ.,வினருக்கு வேறு எந்த வேலையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.