'காந்தாரா - 2' படப்பிடிப்பில் வெடிபொருள் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு
'காந்தாரா - 2' படப்பிடிப்பில் வெடிபொருள் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு
ADDED : ஜன 21, 2025 07:11 AM
பெங்களூரு: ''காந்தாரா - 2 திரைப்பட குழுவினர், வனத்துறை விதிகளை மீறியிருந்தால், படப்படிப்பை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
ரிஷப் ெஷட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' முதல் பாகம், தேசிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை தற்போது ஹொம்பாலே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பு, ஹாசனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று அளித்த பேட்டி:
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவின் ஹெரூர் கிராமத்தில், கவிபெட்டாவை சுற்றிலும் 23 நாட்களுக்கு, ரிஷப் ெஷட்டி இயக்கி நடிக்கும் 'காந்தாரா 2' திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக மாவட்ட வனத்துறை அதிகாரியின் நிபந்தனைக்கு உட்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், ஊடகங்களில், வனப்பகுதியில் வெடிபொருட்கள் பயன்படுத்தி படப்பிடிப்பு நடப்பதாகவும், இதனால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியானது.
இத்தகவல் என் கவனத்துக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். திரைப்பட குழுவினர், விதிமுறையை மீறியிருந்தால், படப்பிடிப்பை நிறுத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
கடந்தாண்டு 'டாக்சிக்' படக்குழு, பீன்யாவில் உள்ள எச்.எம்.டி.,க்கு சொந்தமான நிலத்தை 'லீசு'க்கு எடுத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதற்காக அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
உயர் நீதிமன்றமும், படப்பிடிப்புக்கு தடை விதித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஹாசனில் 2023 டிசம்பரில், யானையை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த தசரா யானையான அர்ஜுனாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் பணியை, பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.