ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கும் திறன் உள்ளது மேலவையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கும் திறன் உள்ளது மேலவையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : பிப் 24, 2024 04:45 AM

பெங்களூரு : ''பெங்களூரில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கும் திறன், போலீசாருக்கு உள்ளது. ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்க, உள்துறைக்கு சக்தி உள்ளது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் நாகராஜ் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
பெங்களூரில் ரவுடிகளின் நடவடிக்கையை, போலீசார் கண்காணிக்கின்றனர். மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். சட்டவிரோதமாக நடந்தால், சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்படும்.
சமீபத்தில் நகர போலீஸ் கமிஷனரே, ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினார். அங்கிருந்த துப்பாக்கி, இரும்புத்தடி உட்பட, பல்வேறு ஆயுதங்களை பறிமுதல் செய்தார். ரவுடிகளை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் நிர்பயா திட்டத்தின் கீழ், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 655 கோடி ரூபாய் செலவில், நகர் முழுதும் 7,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிட்டி கமாண்ட் கன்ட்ரோல் ரூம் திறந்துள்ளோம். பதற்றமான, மிகவும் பதற்றமான பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவைகள் தினமும் 24 மணி நேரமும் இயங்குகின்றன.
நகரின் எந்த பகுதிகளிலும், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை கன்ட்ரோல் ரூம் மூலமாகவே, கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. எங்காவது கேமரா செயல்படவில்லை என்றால், அங்கிருந்தே ஊழியர்களுக்கு உத்தரவிடலாம். இதனால் குற்றங்களை தடுக்க முடியும்.
சமீபத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக, 'சேப்டி ஐலண்ட்' திட்டம் செயல்படுத்தப்பட்டது.
யாராவது தாக்கினால், பையை பறித்து சென்றால், செயின் பறிப்பு நடந்தால் உடனடியாக, தொலைபேசி போன்று ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.
ஐந்து நிமிடங்களுக்குள் போலீசார் அங்கு வருவர். ஒவ்வொரு தகவலும் பதிவாகும் என்பதால், குற்றம் செய்தவர்கள், தலைமறைவாக முடியாது.
சமீபத்தில் பெங்களூருக்கு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர், தன் பர்சை தொலைத்திருந்தார். உடனடியாக பட்டன் அழுத்தியதால், சிறிது நேரத்திலேயே குற்றவாளியை பிடிக்க முடிந்தது.
எனவே பொது மக்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டிலேயே சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களை திறந்த முதல் நகர் பெங்களூரு. முதலில் சைபர் குற்றங்கள் நடந்தால், குறிப்பிட்ட போலீஸ் நிலையங்களில் மட்டுமே, வழக்கு பதிவு செய்ய வாய்ப்பிருந்தது.
தற்போது அனைத்து போலீஸ் நிலையங்களிலும், வழக்கு பதிவு செய்ய வாய்ப்பளித்துள்ளோம். இதற்காக, ஹொய்சளா போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொது மக்களின் பாதுகாப்புக்காக, நாங்கள் 112 உதவி எண் துவக்கியுள்ளோம். இதில் சரியான தகவலை கொடுத்தால், போலீசார் அங்கு சென்று குற்றவாளிகளை பிடிக்க முடியும். பெங்களூரில் குற்றங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.