அமைச்சர் பரமேஸ்வர், -து.மு., சிவகுமார் சந்திப்பு எதற்கு? காங்கிரசில் மீண்டும் தலை துாக்குகிறது குழப்பம்
அமைச்சர் பரமேஸ்வர், -து.மு., சிவகுமார் சந்திப்பு எதற்கு? காங்கிரசில் மீண்டும் தலை துாக்குகிறது குழப்பம்
ADDED : செப் 30, 2024 10:49 PM

பெங்களூரு : மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, துணை முதல்வர் சிவகுமார் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இருவருமே முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்கள். இதனால் கர்நாடக காங்கிரசில் மீண்டும் குழப்பம் தலை துாக்கி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆவதற்கு ஆசைப்படுகிறார். இதேபோல உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஆகியோரும் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளனர்.
தங்களின் முதல்வர் பதவி ஆசையை இவர்கள் பல முறை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் உள்ளனர். ஆனால் சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்பார் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
விலக மாட்டேன்
இந்நிலையில் 'முடா' வில் இருந்து மனைவிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக, சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
''என் மீது எந்த தவறும் இல்லை. நான் பதவி விலக மாட்டேன்,'' என, சித்தராமையா கூறி வருகிறார்.
''முதல்வர் மீது எந்த தவறும் இல்லை. அவருக்கு ஆதரவாக பாறை போன்று உறுதியாக இருப்பேன்,'' என, சிவகுமார் கூறி இருந்தார். ஆனாலும் முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த மாதம் டில்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற அவர், ஏற்கனவே அங்கு இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுலையும் சந்தித்துப் பேசினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒக்கலிகா சமுதாய மாநாட்டில் சிவகுமார் பேசும்போது, ''நமது மாநிலத்திற்கு சேவை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு உள்ளது,'' என்று கூறி, தனது முதல்வர் ஆசையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.
அரசியல் ரீதியாக...
இந்நிலையில், பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டிற்கு நேற்று காலை சிவகுமார் திடீரென சென்றார். இருவரும் அரைமணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
பின், வெளியே வந்த இருவரும், 'அரசியல் ரீதியாக நாங்கள் எதுவும் பேசவில்லை. எத்தினஹோலே குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்து இருவரும் விவாதித்தோம்' என்றனர்.
ஆனாலும் அவர்கள் இருவரும் முதல்வர் பதவி குறித்து விவாதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரசில் தலைவராக இருப்பவர்கள் தலைமையின் கீழ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தலைவருக்கே முதல்வர் பதவி வழங்குவது காங்கிரஸ் வழக்கம்.
பலத்தை காட்டி...
கடந்த 2013 சட்டசபை தேர்தலை அப்போது மாநிலத் தலைவராக இருந்த பரமேஸ்வர் தலைமையில் காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. ஆனால் தனிப்பட்ட முறையில் பரமேஸ்வர் தோற்றதால், முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ம.ஜ.த.,வில் இருந்து காங்கிரசுக்கு வந்த சித்தராமையா முதல்வரானார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. சிவகுமார், முதல்வர் ஆவார் என்று கூறப்பட்டது. ஆனால் தனது பலத்தைக் காட்டி சித்தராமையா முதல்வர் ஆனார்.
“மாநிலத் தலைவராக இருந்து உங்களது தலைமையின் கீழ் கட்சி வெற்றி பெற்றும், உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அதுபோல எனது தலைமையின் கீழ் கட்சி வெற்றி பெற்றும், எனக்கும் முதல்வர் பதவி கிடைக்கவில்லை. எனக்கு முதல்வர் பதவி கிடைக்க ஒத்துழையுங்கள்,” என பரமேஸ்வரிடம், சிவகுமார் கேட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முடா வழக்கு சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை அவர் ராஜினாமா செய்தால், முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் சிவக்குமார் தீவிரமாக களமிறங்கி உள்ளார். இதனால் கர்நாடக காங்கிரசில் மீண்டும் குழப்பம் தலை துாக்கி உள்ளது.