குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நியமனம் அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நியமனம் அமைச்சர் பர்வேஷ் வர்மா தகவல்
ADDED : மார் 29, 2025 07:20 PM
புதுடில்லி:“டில்லி மாநகரில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளைத் தீர்க்க, குறைதீர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்,” என, நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறினார்.
டில்லி பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா, நிருபர்களிடம் கூறியதாவது:
கோடைகாலத்தில் குடிநீர் சப்ளையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க, குறைதீர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். குடிநீர் வினியோகம் தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்னையைத் தீர்ப்பர்.
கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. டில்லியில் வரும் கோடையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோடைகால செயல் திட்டம் முழுமையாக தயாராக உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் இருப்பு நிலையை மதிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் சீராக உள்ள இடங்களில் குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் டேங்கர் லாரி தேவைப்படும் இடங்களுக்கு கூடுதல் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல, ஒவ்வொரு டேங்கர் லாரிக்கும் இரண்டு டிரைவர்கள் நியமிக்கப்படுவர்.
டேங்கர் லாரிகளைக் கண்காணிக்கவும், குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படும். அதேபோல, ஒரு டேங்கர் லாரி தினமும் ஒன்பது முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதைவிட குறைவாக அந்த லாரிக்கு பணம் தரப்படாது.
குழாயில் தண்ணீர் கசிவைத் தடுக்க உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும், மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் வினியோகம் செய்யவும், அனைவருக்கும் சமமான குடிநீர் வழங்கவும் புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.