மின்விபத்தில் இரு நண்பர்களை காப்பாற்றிய 10 வயது சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு
மின்விபத்தில் இரு நண்பர்களை காப்பாற்றிய 10 வயது சிறுவனுக்கு அமைச்சர் பாராட்டு
ADDED : டிச 20, 2024 10:36 PM

பாலக்காடு; மின் விபத்தில் இருந்து நண்பர்களை காப்பாற்றிய, 10 வயது சிறுவனை, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டோப்பாடம் கொடுவாளிப்புரம் பகுதியை சேர்ந்த உம்மர் பாரூக் - -பாத்திமத்து சுஹ்ரா தம்பதியரின் மகன் முகமது சிதான், 10. அருகில் உள்ள கல்லடி அப்து ஹாஜி மேல்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி காலை, சலீம்- - ஹசனத்து தம்பதியரின் மகன் முகமது ராஜிஹ், யூசப் - -ஜுசைலா தம்பதியரின் மகன் ஷஹஜாஸ் ஆகியோருடன், முகமது சிதான் பள்ளிக்கு சென்றனர்.
அப்போது, ராஜிஹ் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்தது. அதை எடுக்க, சுவர் மீது ஏறும்போது ராஜிஹ் கால் தவறிய போது, விழாமல் இருக்க அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார். கம்பத்தில் இருந்த பியூஸ் கேரியரில் கை சிக்கி மின்சாரம் தாக்கியது. ராஜிஹை காப்பாற்ற சென்ற ஷஹஜாசையும் மின்சாரம் தாக்கியது.
அப்போது, நண்பர்கள்இருவரையும் காப்பாற்ற, சமயோஜிதமாக யோசித்த முகமது சிதான், அருகில் கிடந்த உலர்ந்த மர தடியால், இருவரையும் தட்டி விட்டுள்ளார். கூச்சலிட்டு அப்பகுதி மக்களை அழைத்துள்ளார்.
கை மற்றும் முகத்தில் காயமடைந்த சிறுவன் ராஜிைஹ மீட்ட மக்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஷஹஜாஸ் சிறு காயங்களுடன் தப்பினார். இரு உயிர்களை காப்பாற்றிய முகமது சிதானை, கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர்கள் குழு பாராட்டியது.