துணை முதல்வர் சிவகுமாருக்கு அமைச்சர் ராஜண்ணா சவால்! முதல்வர் பதவி கிடைக்கவே கிடைக்காது என சாபம்
துணை முதல்வர் சிவகுமாருக்கு அமைச்சர் ராஜண்ணா சவால்! முதல்வர் பதவி கிடைக்கவே கிடைக்காது என சாபம்
ADDED : ஆக 08, 2024 10:23 PM

பெங்களூரு : 'மூடா முறைகேட்டில் சிக்கிய, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டாலும், சதீஷ் ஜார்கிஹோளி தான் அடுத்து முதல்வராவார்' என, மூத்த அமைச்சர் ராஜண்ணா தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, சிவகுமார் முதல்வராகவே முடியாது என அவர் சாபம் கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு அமைந்த போதே, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இறுதியில் சித்தராமையாவின் கை ஓங்கியது.
இரண்டாவது முறையாக முதல்வரானார். இதை அவரது எதிரி கோஷ்டியினரால் சகிக்க முடியவில்லை. உள்ளுக்குள் புழுங்குகின்றனர்.
அரசு அமைந்த போது, சித்தராமையா, சிவகுமாரை இரண்டரை ஆண்டுகள் வீதம், முதல்வராக இருக்க டில்லி மேலிட அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, தகவல் வெளியானது.
ஏற்கனவே ஒன்றரை ஆண்டை அரசு நெருங்குகிறது. அடுத்த ஓராண்டில் முதல்வர் பதவியை, சிவகுமாருக்கு சித்தராமையா விட்டுத்தர வேண்டும் என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் முடிவு
அதற்கு முன்னதாகவே, அவரை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்க, எதிரி கோஷ்டியினர் வியூகம் வகுக்கின்றனர். முதல்வரை மாற்ற செய்து, சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்த முயற்சி நடந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவு, இவர்களின் முயற்சிக்கு தற்காலிக முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
ஏனென்றால் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக பெங்களூரு ரூரல் தொகுதியில், சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோற்றார். இது, சகோதரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இனி முதல்வர் மாற்றம் என்ற பேச்சே இருக்காது என, சித்தராமையா ஆதரவாளர்கள் நினைத்தனர்.
இதற்கிடையே, மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு, முதல்வர் சித்தராமையாவை நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. இவரது சொந்த மாவட்டத்தில், முறைகேடு நடந்தது மட்டுமின்றி, இவரது குடும்பத்தினர் பெயர் அடிபடுகிறது. மூடாவில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், சட்டவிரோதமாக 14 மனைகள் பெறப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் அளித்த புகாரின்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், விளக்கம் கேட்டு முதல்வருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார். இது அரசு மற்றும் கட்சியில் பெரும் சூறாவளியை கிளப்பியுள்ளது. கவர்னர் மாளிகையை பா.ஜ., தவறாக பயன்படுத்துவதாக, காங்கிரசார் பாய்கின்றனர். நோட்டீசுக்கு எதிராக அமைச்சரவை கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை பா.ஜ., கண்டித்துள்ளது.
மூடா முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போர்க்கொடி உயர்த்தினர். சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் அரசுக்கு குடைச்சல் கொடுத்தனர். இப்போது பெங்களூரில் இருந்து, மைசூருக்கு பாதயாத்திரை நடத்துகின்றனர்.
ஊழலற்ற ஆட்சி
எதிர்க்கட்சியினர் நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு முன் ஊழலற்ற ஆட்சியை அளிப்போம் என, உறுதி அளித்த சித்தராமையா குடும்பத்தினரே, வீதிமீறலாக மனை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க, சித்தராமையாவிடம் காங்., மேலிடம் ராஜினாமா பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது.
அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்த, ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதற்காகவே மூடா முறைகேடு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை, பா.ஜ., தலைவர்களிடம் அவர்கள் ரகசியமாக கொடுத்ததாக, முதல்வரின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எந்த காரணத்தை கொண்டும், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விடக்கூடாது. ஒருவேளை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர விடக்கூடாது என்பதில், முதல்வரின் கோஷ்டியினர் உறுதியாக உள்ளனர்.
இது தொடர்பாக, சித்தராமையாவின் ஆதரவாளரான கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, நேற்று அளித்த பேட்டி:
மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமயாவுக்கு தொடர்பு இல்லை. அவர் ராஜினாமா செய்ய மாட்டார். ஆட்சி காலம் முழுதும், அவரே முதல்வராக இருப்பார். அவருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். ஒருவேளை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சதீஷ் ஜார்கிஹோளி முதல்வராகலாம். அவருக்கு முதல்வராகும் தகுதி அதிகம்.
டில்லி முதல்வர்
சித்தராமையா எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். ஊழல் வழக்கு தொடர்பாக, சிறைக்கு சென்ற டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தாரா. சித்தராமையாவை முதல்வராக்கியது கவர்னரா, மத்திய அரசா அல்லது குமாரசாமியா. சித்தராமையாவிடம் ராஜினாமா பெற்றால், அது ஜனநாயக படுகொலையாகும்.
அவர் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருக்கு பக்கபலமாக நிற்கும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாங்கள் நடந்து கொள்கிறோம்.
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, முதல்வர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுவது பொய். இது வெறும் ஊகம். தனிப்பட்ட முறையில் இருவரும் நல்ல நண்பர்கள். வரும் நாட்களில், அவர் முதல்வரானாலும் ஆச்சர்யப்பட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் வாயிலாக, 'சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகினாலும், சிவகுமார் அந்த இடத்துக்கு வர முடியாது, சதீஷ் தான் வருவார்' என, ராஜண்ணா சாபம் கொடுத்துள்ளதாகவே, காங்கிரசார் கூறுகின்றனர்.