UPDATED : மே 07, 2025 08:24 PM
ADDED : மே 07, 2025 07:24 AM

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இன்று காலை பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
போர்க்கால ஒத்திகை என்று பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்பி, ஆபரேஷன் சிந்தூரை கனக்கச்சிதமாய் இந்திய ராணுவம் நிறைவேற்றி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது.
நள்ளிரவில் தொடங்கிய இந்த ஆபரேஷனின் அடுத்தடுத்த நிமிடங்களில் சமூக வலைதளங்களில் இந்திய ராணுவம் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பாரத் மாதா கீ ஜெய் என்று பதிவிட்டு இருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயிருக்கும் தருணத்தில், சிந்தூர் ஆபரேஷனின் தற்போதைய நிலை, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது தாக்குதல் நிறைவேற்றப்பட்ட போது இருந்த நிலைமை, ராணுவத்தின் அடுத்த செயல்பாடுகள், எல்லைகளில் தற்போதுள்ள சூழல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர் மோடி தலைமையில், இன்று காலை பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.