சிராவில் விமான நிலையம் அமைக்க முடியாது காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதிலடி
சிராவில் விமான நிலையம் அமைக்க முடியாது காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதிலடி
ADDED : ஏப் 11, 2025 06:40 AM

பெங்களூரு: சிராவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரசின் 30 எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் எழுதிய நிலையில், அங்கு அமைக்க முடியாது என்று, அமைச்சர் எம்.பி.பாட்டீல் பதிலடி கொடுத்து உள்ளார்.
கர்நாடக அரசின் தொழில் துறை சார்பில், பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கனகபுரா, நெலமங்களா, குனிகல் சாலை சேலுாரில் இடம் கண்டறியப்பட்டது. தற்போது மத்திய குழு இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்கிறது.
இந்நிலையில் கனகபுரா, நெலமங்களாவிற்கு பதிலாக துமகூரு, சிராவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, வடமாவட்டத்தை சேர்ந்த 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், முதல்வருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினர். சிராவில் விமான நிலையம் அமைந்தால் என்னென்ன லாபம் என்பது பற்றியும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய குழு
இதுபற்றி, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் அமைக்க, பிடதியும் பொருத்தமான இடமாக இருக்கும் என்று, முதலில் நினைத்தோம். ஆனால் அங்கு விமான நிலையம் அமைப்பது சாத்தியம் இல்லை.
நெலமங்களா, சேலுாரில் மத்திய குழு ஆய்வு செய்து உள்ளனர். யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாமல் இடத்தை தேர்வு செய்யும்படி, எனது துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்.
தற்போது சிராவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயசந்திரா கோரிக்கை வைத்து உள்ளார்.
அவர் மூத்தவர். அவரது வார்த்தைக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். ஆனால் சிராவில் விமான நிலையம் அமைப்பது முடியாது. அங்கு அமைந்தால் அது துமகூரு மாவட்ட விமான நிலையமாக மட்டுமே செயல்படும். கனகபுரா, நெலமங்களா பகுதியில் அமைப்பதால் மக்களுக்கு அனுகூலம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோதல்
எம்.பி.பாட்டீலின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். துணை முதல்வர் சிவகுமாரின் அழுத்தத்திற்கு அடிபணிந்ததாகவும், வடமாவட்டத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''சிராவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, ஆறு மாதத்திற்கு முன்பே முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அங்கு விமான நிலையம் வந்தால் வடமாவட்ட மக்களுக்கு அனுகூலமாக இருக்கும்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''சிராவில் விமான நிலையம் வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் மத்திய குழு முடிவு செய்ய வேண்டும். இங்கு விமான நிலையம் வந்தால் வடமாவட்டங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும்,'' என்றார்.
விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இது எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.