சிவகுமார் மீது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குற்றச்சாட்டு! அதீத நம்பிக்கையால் காங்., தோற்றதாக அதிருப்தி
சிவகுமார் மீது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குற்றச்சாட்டு! அதீத நம்பிக்கையால் காங்., தோற்றதாக அதிருப்தி
ADDED : ஜூன் 05, 2024 11:27 PM

பெங்களூரு : ''கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருந்தும், லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கிடைக்காததற்கு, மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமாரின் அதிகமான நம்பிக்கையே காரணம்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது போன்று, லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியில் அமர துடியாய் துடித்தது.
கர்நாடகாவில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தலைவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
மாநில தலைவர்களும், 'இம்முறை கட்சிக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. 22 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்' என, நம்பினர். வாக்குறுதி திட்டங்கள் உதவும் என, எதிர்பார்த்தனர். ஆனால் அது பொய்த்துவிட்டது. ஒன்பது தொகுதிகளில் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது.
ஆளுங்கட்சியாக இருந்தும், இரட்டை இலக்க வெற்றியை எட்ட முடியாமல் போனது. இதற்கு காரணம் துணை முதல்வர் சிவகுமார் என, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குற்றம் சாட்டியுள்ளார்.
பெலகாவி, கோகாக்கில் அமைச்சர் சதீஷ் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் இரட்டை இலக்க வெற்றியை எட்ட முடியாமல், தோல்வியடைந்ததற்கு எங்கள் கட்சி தலைவரின் (சிவகுமார்), அளவுக்கு அதிகமான நம்பிக்கையே காரணம். டைரக்டர், புரொட்யூசர் சரியாக செயல்படா விட்டால், இது போன்ற முடிவு ஏற்படும்.
தேர்தலுக்கு நேரம் குறைவாக இருக்கும். அப்போது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் வந்து சென்று விடும். முன் கூட்டியே தயாராக வேண்டும். பல தொகுதிகளை எங்கள் தலைவர் அலட்சியப்படுத்தியதே, கட்சியின் பின்னடைவுக்கு காரணம்.
கட்சியின் கேப்டனாக இருப்பவர், சரியான ஆலோசனைகள் கூறவில்லை. ஐந்தாறு தொகுதிகளில், காங்., வேட்பாளர்கள் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது, கவனிக்க கூடிய விஷயமாகும். தேர்தல் பொறுப்பை ஏற்றவர், சிறிது உழைத்திருந்தால், கூடுதல் தொகுதிகள் கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகுமார் - சதீஷ் ஜார்கிஹோளி இடையே, பனிப்போர் ஏற்படுவது புதிய விஷயம் அல்ல. பெலகாவி அரசியலில், வெளியாள் தலையிடுவதாக சிவகுமார் மீது சதீஷ், அதிருப்தியில் இருந்தார்.
தன் துறையில் முறைகேடு செய்தார் என்பதால், அதிகாரி ஒருவரை சதீஷ் சஸ்பெண்ட் செய்திருந்தார். ஆனால், அதே அதிகாரியை மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், வேறு பதவியில் அமர்த்தினார்.
இதனால் சதீஷ் கொதிப்படைந்தார். இது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். லட்சுமி ஹெப்பால்கரை அடக்கி வைக்கும்படி வலியுறுத்தினார்.
அப்போது சிவகுமார், லட்சுமி ஹெப்பால்கருக்கு ஆதரவாக நின்றார். இது சதீஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். லோக்சபா தேர்தலிலும், தன் மகளுக்கு சிக்கோடி தொகுதியில், சீட் பெற சதீஷ் அதிகம் போராட வேண்டியிருந்தது.
தற்போது, தேர்தல் தோல்விக்கு சிவகுமார் மீது சதீஷ் குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து, வரும் நாட்களில் மாநில தலைவரை மாற்றும்படி, மேலிடத்துக்கு சதீஷ் நெருக்கடி தந்தாலும், ஆச்சரியப்பட முடியாது.